வவுனியா நெளுக்குளம் புதையல்பிட்டி வீதியில் பெருமளவு கிரவல் மண் கொட்டப்பட்டுள்ளதால் அவ்வீதியால் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரிதும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் புதையல்பிட்டி மயான வீதி திருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
வீதி திருத்துவதாக தெரிவித்து வீதியின் நடுவே பெருமளவு கிரவல் மண் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியூடாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி. கிஷோர் சுகந்தியிடம் தொடர்பு கொண்டபோது, குறித்த புதையல்பிட்டி வீதியானது எமது பிரதேச சபைபகுதிக்குட்பட்டுள்ளது எனினும் குறித்த வீதியின் புனரமைப்புப்பணிகளை வவனியா பிரதேச செயலகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
வவுனியா பிரதேச செயலாளரிடத்தில் இது தொடர்பாக வினவியபோது, புதையல்பிட்டி மயான வீதியின் புனரமைப்புபணிகள்  அப்பகுதி கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாகவே  இடம்பெற்று வருவதாகவும். பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் விதத்தில் கிரவல் மண் போடப்பட்டிருப்பின்  கிராம அபிவிருத்தி சங்கத்தினுடன் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
குறித்த வீதியானது கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி வீதியின் நடுவே போடப்பட்ட கிரவல் மண் இன்று (13.07) நான்கு தினங்கள் கடந்த நிலையிலும் வீதியின் நடுவே உள்ளது. குறித்த வீதியால் சென்று வரும் பொதுமக்கள். பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குட்பட்டுள்ளதுடன் அவசர தேவையின் நிமித்தம் வாகனத்தில் சென்றுவருவதற்கு பெரும் தடையாகவுள்ளது எனவே குறித்த வீதி புனரமைப்புக்களை மேற்கொண்டு வருபவர்கள் பொதுமக்களின் அவசர தேவைகளைக்கருத்திற் கொண்டு குறித்த வீதியில் போடப்பட்டுள்ள கிரவலை அகற்றி அப்பகுதி மக்களின் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் வீதி வவுனியா  தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரிய வீதி என்ற வகையில் மக்களின் போக்குவரத்துக்கு  இடையூறாக இருக்கும் இச்செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது  பிரதேச சபையின் கடமையாகும்.
3173 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments