தினச்சுடர் கிண்ணத்திற்கு வவுனியா நீதிமன்றம் இடைக்காலத்தடை

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன்  தினச்சுடர் இணையம் நடாத்தும் தினச்சுடர் கிண்ணம் – 2017 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு வவுனியா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த (17.06.2017) அன்று ஆரம்பிக்கப்பட்டு உதைபந்தாட்ட ரசிகர்களின் பேராதரவுடன் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் கடந்த (28.06.2017) அன்று இடம்பெற்ற  போட்டியில் பங்குபற்றிய கழகமொன்றின் வீரரின் விதிமீறல் தொடர்பாக எதிரணி மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க முற்பட்ட காரணத்தினால் ஏற்ப்பாட்டுக்குழுவின் தலைவரும் ஊடகவியலாளருமான என்.ஜனகதீபன் மீதும் வவுனியா உதைபந்தாட்ட சங்க நிர்வாகிகள் மீதும் தொடரப்பட்ட   இந்த வழக்கு  இன்றுகாலை முதல் வழக்காக  விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த  அனைத்து சட்டத்தரணிகளும் (ஓரிருவரை தவிர ) எழுந்து நின்று வாதிட்டு போட்டிக்கான தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

விளையாட்டு ஏற்பாட்டு குழுவினாலும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்த குறித்த கழகத்தின் நிர்வாக  உறுப்பினர் சட்டத்தரணி இராசையா இளங்குமரன்  உள்ளிட்ட 11 நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதன் காரணமாக திட்டமிட்ட திகதியில் போட்டியை நடத்த முடியாத நிலைக்கு போட்டி ஏற்பாட்டுக்குழு தள்ளப்பட்டுள்ளதுடன் போட்டிக்காக பெரும் பணச் செலவில் மேற்கொண்ட ஆரம்பகட்டப் பணிகள், ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானம் , பதாதைகள்,சுவரொட்டிகள் என்பன பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளமையால் பாரிய பண இழப்பினை சந்தித்திருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அழைப்புக்களும் பங்குபற்றலும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதுடன் இந்த தடை உத்தரவின் காரணமாக பல அனுசரணையாளர்கள் விலகிக்கொண்டுள்ளதாகவும்   விதிக்கப்பட்ட இந்த இடைக்காலத்தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்  போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1710 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments