யாழ். புன்னாலைக்கட்டுவன் மில் ஒழுங்கையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த 18 வயது இளைஞரின் நவீன கைத்தொலைபேசி ஒன்று இனந்தெரியாத இளைஞர்கள் இருவரால் நுட்பமான முறையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

யாழ். குப்பிளானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த அயலவர் ஒருவருடன் இன்று இரவு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலுள்ள உணவகமொன்றுக்குச் சென்று வீட்டிலுள்ளவர்களுக்குத் தேவையான இரவு உணவைக் கொள்வனவு செய்த பின்னர் வீடு நோக்கித் துவிச்சக்கரவண்டியில் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த இளைஞர் தன் கைத்தொலைபேசியில் வெளிச்சம் பாய்ச்சியவாறு துவிச்சக்கர வண்டியைச் செலுத்தியுள்ளார்.

இதன்போது பின்னால் மோட்டார்ச் சைக்கிளொன்றில் வந்த இரு இளைஞர்கள் சில மீட்டர் தூரம் வரை சென்ற பின்னர் மீண்டும் மோட்டார்ச் சைக்கிளைத் திரும்பிச் செலுத்தி வந்துள்ளனர்.

அவர்களில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த இளைஞனிடம் ‘தம்பி இந்தப் பாதை எங்கே போகுது’ எனக் கேட்டுள்ளனர்.

அதற்குக் இந்த இளைஞன் பதிலளிப்பதற்கிடையில் இளைஞனின் கையில் வைத்திருந்த பெறுமதியான கைத்தொலைபேசியைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இளைஞன் திருடன்….திருடன்….என அவலக்குரல் எழுப்பிய போதிலும் கைத்தொலைபேசித் திருடர்கள் அங்கிருந்து மறைந்து விட்டனர்.

திருட்டு சம்பவத்துடன் ஈடுபட்ட இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார்ச் சைக்கிள் இலக்கம் NP….6096 எனவும், இந்த இலக்கத்திற்கு முன்னாலுள்ள இரு ஆங்கில எழுத்துக்களைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை எனவும் கைத்தொலைபேசியைப் பறிகொடுத்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீதியில் குடியிருப்புக்கள் குறைவாக அமைந்து காணப்படுவதுடன், வழமையாக இரவு வேளையில் இந்த பகுதியில் மக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைவடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

540 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments