வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையிலீடுபடும் பேருந்துகளே பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த இடமாக காணப்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

வறிய மக்களுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களும் நாளாந்தம் தமது தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தி வரும் போக்குவரத்து சாதனம்தான் இந்த தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள்.

நாளாந்தம் மக்கள் தத்தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக பயணிக்கும் இந்த பேருந்துகளில் அதன் கொள்ளளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதனால் நாளாந்தம் பயணிகள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக பாடசாலைகளுக்கும் தனியார் வகுப்புகளுக்கும் மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் தொழில்களுக்கு செல்லும் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை நாளாந்தம் பல பிரச்சினைகளை குறித்த பேருந்து சேவைகளால் எதிர்கொண்டுவருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் மட்டுமல்லாது அரச பேருந்துகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது. காலை வேளைகளில் தொழிலுக்கு பாடசாலை மற்றும் தெழிலகங்களுக்கு செல்லும்போதும் மாலை நேரங்களில் வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் பல பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவதை காணமுடிகின்றது.

பேருந்துகளில் பாலியல் எண்ணத்துடன் பல ஆண்கள் பயணிப்பதனால் பெண்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்துகளில் பகல் நேரங்களை விடவும் மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் அதிகம் என்பதால் இவ்வாறு நெருக்கடி நிலையை பயன்படுத்தி குறித்த கூட்டங்கள் பெண்களை தொல்லைகொடுத்து வருவதைக் காணமுடிகின்றது.

அலுவலகம், தொழிற்சாலை, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாலை வேளையிலேயே வீடு திரும்புகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருந்துகளில் ஏறும் சில ஆண்கள் திட்டமிட்ட வகையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதுடன் அவற்றை படங்கள் எடுத்து அந்தப் படங்களைக் கொண்டு  குறித்த பெண்களை மிரட்டி படுக்கையறைக்கு இழுப்பதான சம்பவங்களும் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதைவிட பரிதாபமான விடயம் என்னவெனில் சில தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து நடத்துநர்கள் பெண் பயணிகளை குறிப்பாக திருமணமான பெண்களை அதிகளவில் சீண்டி தமக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதற்கு சான்றாக சட்டத்தின் முன் சென்ற சம்பவங்கள் பல உள்ளன.

இதைவிட தனியார் பேருந்து நடத்துநர்கள் பெண்களின் முதுகில் தடவுவதும் மார்பகங்களில் தட்டுவதுமான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதை தட்டிக்கேட்டால் இது சகஜம் என்று சொல்லும் வாகன நடத்துநர்கள் அவ்வாறு ஒத்துப்போகாவிட்டால் இறங்குமாறும் சத்தமிடுகின்றார்கள் என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

இதைவிட தனியார் பேருந்துகளால் ஏற்படும் மற்றொரு மோசமான செயலாக காலை வேளைகளில் அதிகளவானவர்கள் தமது தொழில் நிமித்தமும் பாடசாலைகளுக்குமாக குறித்த பேருந்துகளில் பயணிக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பேருந்துகளும் அரச பேருந்துகளுக்கும் இடையே வியாபார போட்டி ஏற்படுகின்றது.

யார் அதிகளவான வசூலை காட்டுவது என்ற போட்டியில் குறித்த பேருந்துகளில் அகப்பட்டு வதைபடுவது அப்பாவி பொதுமக்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகளவான பயணிகளை ஏற்றுவது போட்டிக்கு பேருந்துகளை ஓட்டுவது என்ற தனியார் மற்றும் அரச பேருந்துகளின் போட்டிகளால் பேருந்தில் பயணிப்பவர்கள் மட்டுமல்ல வீதிகளில் செல்லும் ஏனைய பயணிகளும் உயிராபத்தை எதிர்கொள்ளவேண்டி ஏற்படுகிறது.அதாவது அரச மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் கவனயினம், சமிக்ஞைகளை பின்பற்றாமை, சடுகதியில் பேருந்தை நிறுத்துவது, வீதியின் நடுப்பகுதியில் பேருந்தை நிறுத்துவது, அதிகளவான பயணிகளை ஏற்றி செல்வது, நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேருந்தை நிறுத்தி வைப்பது என பல விபத்துக்கான ஏதுநிலைகளை உருவாக்குகின்றனர். இதற்கு அதிக களத்தை தனியார் பேருந்துகளே உருவாக்கிக்கொள்கின்றது.

ஆக, தனியார் பேருந்துகளானாலும் சரி அரச பேருந்துகளானாலும் சரி பயணிகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை உள்ளவர்களாகவே இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தமது பொருளாதார இலாபத்துக்காக தமது பேருந்துகளில் நடைபெறும் பெண்கள் மீதான குறித்த பாலியல் தொந்தரவுகளை கண்டும் காணாதிருப்பதால் மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட அவர்கள் களம் அமைத்து கொடுப்பதாக அமைகின்றது.

எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான இந்த சேவையின் தரத்தை மழுங்கடிக்கவோ அன்றி மற்றவர்கள் விமர்சிப்பதற்கு இடம் கொடுக்கவோ குறித்த இரு சாராரும் தமது கடமைகளை சரிவர செய்யவேண்டும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் தத்தமது பேருந்துகளில் நடைபெற்றால் உடனடியாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டியதும் அவர்களது கடமையாகும்.

தனியார் துறை பேருந்துகள் மீதே அதிகளாவாக இச்சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இவற்றை கழைந்து தமது சேவையின் தராதரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்வது அவர்களது கடமை. இல்லையேல் பல நடத்துநர்கள் சாரதிகள் பேருந்துகள் உள்ளடங்கலான வீடியோ பதிவுகள் வெளிவருவதையும் தடுக்க முடியாது.

இது வடக்கின் தனியார் மற்றும் அரச பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பார்வைக்கு.

4866 Total Views 2 Views Today
  • 159
  •  
  •  
  •  
  •  
    159
    Shares

Comments

comments