உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையே தேர்தல் பங்கீடு தொடர்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது சுமூக முடிவுகள் எதுவும் எட்டப்படாதிருந்தன.

இந்நிலையில், நேற்றைய தினம் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையே முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்ற போதிலும், இந்தக் கலந்துரையாடலிலும் தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை.இந்த பின்னணியிலேயே, இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ரெலோ இன்று அதிகாலையில்  திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 01.15 மணி வரையில் வவுனியாவில் அந்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரெலோவின் செயலாளர் சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில், “கடந்த வாரம் 3 நாட்கள் இலங்கை தமிழரசு கட்சியுடன் தேர்தல் பங்கீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் தமிழரசு கட்சி மிக கடுமையானதும், பிடிவாதமானதும், விட்டுக்கொடுக்க முடியாததுமான நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

இதன் காரணமாக வேறு வழியின்றி தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கட்சி தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1986 Total Views 7 Views Today
  • 137
  •  
  •  
  •  
  •  
    137
    Shares

Comments

comments