மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் நிரந்தரமாக இல்லாத காரணத்தால் 15 கர்ப்பிணி தாய்மார்கள் அம்புலன்ஸ் வண்டியில் குழந்தை பிரசவித்துள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ஞா. குணசீலன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்திவ நிபுணரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என கர்ப்பிணி தாய்மார்கள் நேற்று திங்கட்கிழமை மன்னாரில் போராட்டம் செய்தனர். அது தொடர்பில் சிறப்பு கவனயீர்ப்பை ஆளும் கட்சி உறுப்பினர் பா. டெனிஸ்வரன் சபைக்கு கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்துக் கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணரை நியமிக்குமாறு பல தடவைகள் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரியும் இதுவரை பதில் இல்லை.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து பிரசவத்திற்காக வேறு வைத்திய சாலைகளுக்கு கர்ப்பிணி தாய்மார்களை அம்புலன்ஸ் வண்டியில் அழைத்து செல்லும் போது தாய்மார்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதுவரை 15 பிரசவங்கள் அவ்வாறு நடந்துள்ளன.

அதேபோல கர்ப்பிணி தாய் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மூலமே குழந்தை பிரசவிக்கும் நிலமை தோன்றிய போது வைத்தியசாலையில் மயக்க மருந்து மருந்துவ நிபுணர் இல்லாத காரணத்தால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்தார்.

இவ்வாறன துன்பகரமான நிகழ்வுகள் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நடைபெற்றுள்ளன. அது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு தெரிய படுத்தி மன்னார் மாவட்ட வைத்திய சாலைக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணரை நியமிக்குமாறு கோரி எந்த நடவடிக்கையும் இல்லை – என்றார்.

295 Total Views 1 Views Today
  • 19
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

Comments

comments