உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
வாக்களிப்பு  நிலையங்கள் மற்றும் வட்டார ரீதியாக வாக்கெண்ணும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மற்றும் தொலைபேசி ஊடாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட முடிவுகளுடன் ஏற்கனவே தொலைபேசி மற்றும் தொலைநகல் ஊடாக வழங்கப்பட்ட தரவுகளை ஒப்பிட வேண்டிய நிலை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அநேகமான வட்டாரங்களில் தபால் மூல வாக்குகளுடன் கூடிய முழுமையான முடிவுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் சில வட்டாரங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தனியாகவும் தபால் மூல முடிவுகள் தனியாகவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனித்தனியாக முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்ட சில வட்டாரங்களில்,  ஒரு அறிக்கை  மாத்திரமே தெரிவத்தாட்சி அதிகாரிக்கு தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  விளக்கமளித்துள்ளார்.
இதனால் இறுதி முடிவை கணிப்பதில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் வட்டார ரீதியான  முடிவுகளை தெரிவத்தாட்சி அதிகாரிகள் பதிவேற்றம் செய்யும் வரை உத்தியோகபூர்வ முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்க முடியாதுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு கிடைக்கும் வரை பொறுப்புடன் இருக்குமாறு அவர் இன்று அதிகாலை விடுத்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
65 Total Views 3 Views Today
  • 5
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

Comments

comments